௧௨௦
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் 
 ௧ நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது, 
உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் காப்பாற்றினார்! 
 ௨ கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும். 
உண்மையில்லாதவற்றை அந்த ஜனங்கள் கூறினார்கள். 
 ௩ பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா? 
நீங்கள் அடையப்போவதை அறிவீர்களா? 
 ௪ வீரனின் கூரிய அம்புகளும், 
சுடும் தழலும் உன்னைத் தண்டிக்கும். 
 ௫ பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும் 
கேதாரின் கூடாரங்களண்டையில் வாழ்வதைப் போன்றதுமாகும். 
 ௬ சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு 
நான் நீண்டகாலம் வாழ்ந்திருக்கிறேன். 
 ௭ நான் சமாதானம் வேண்டும் என்றேன். 
ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.