௧௦௩
தாவீதின் ஒரு பாடல் 
 ௧ என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! 
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள். 
 ௨ என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! 
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே. 
 ௩ நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார். 
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார். 
 ௪ தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். 
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார். 
 ௫ தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார். 
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார். 
 ௬ கர்த்தர் நியாயமானவர். 
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார். 
 ௭ தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார். 
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார். 
 ௮ கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர். 
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர். 
 ௯ கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை. 
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை. 
 ௧௦ நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம், 
ஆனால் நமக்குரிய தண்டனையைத் தேவன் வழங்கவில்லை. 
 ௧௧ வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, 
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது. 
 ௧௨ மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ 
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார். 
 ௧௩ தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று 
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார். 
 ௧௪ தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். 
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார். 
 ௧௫ நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார். 
நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார். 
 ௧௬ நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார். 
அம்மலர் சீக்கிரம் மலர்கிறது. 
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது. 
பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது. 
 ௧௭ ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார். 
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார். 
தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர். 
 ௧௮ அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர். 
அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர். 
 ௧௯ பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது. 
அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார். 
 ௨௦ தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்! 
தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள். 
நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள். 
 ௨௧ அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள். 
நீங்கள் அவரது பணியாட்கள். 
தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள். 
 ௨௨ எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர். 
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார். 
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும். 
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.